Saturday, April 28, 2012

சுகாதார தொண்டர்களின் உரிமைகளை பாதுகாக்கும்முகமாக நிரந்தர நியமனத்தை வழங்குங்கள்:- சிவசக்தி ஆனந்தன்


[29-04-2012]


சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்திலாவது வவுனியா மாவட்டத்தில் நீண்டகாலமாக கடமையாற்றிவரும் பெண் சுகாதார தொண்டர்களின் உரிமைகளை காக்கும் முகமாக நிரந்தர நியமனத்தை வழங்கி அவர்களது உரிமைகளை காப்பாற்றுங்கள் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று  விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தில் 1995 ஆம் ஆண்டு முதல் சுகாதாரத் தொண்டர் ஊழியர்களாக நூற்றுக்கணக்கான வறுமைக்கோட்டின்கீழ் வாழும் இளம் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டு மாவட்ட சுகாதாரப் பணிகளை ஆங்காங்கே உள்ள நடமாடும் மற்றும் கிராமிய மருத்துவ மையங்களிலும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, வவுனியா பொதுமருத்துவமனை ஆகிய இடங்களில் மிகவும் கடின நிலைமையின்கீழ் மேற்கொண்டு வந்துள்ளனர். 

இவர்கள் 2001, 2004, 2008, 2010 ஆம் ஆண்டுகளில் நேர்முகத்தேர்வுக்குட்பட்டு நிரந்தரப் பணி வழங்கப்படுவர் என்று உத்திரவாதமளிக்கப்பட்டு அந்நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வூழியர்கள் உணவுப்பொதியை மட்டும்பெற்றுக்கொண்டு சம்பளமாக எதனையும் பெறாமல், தம்மை வருத்தி பணியாற்றி வந்தனர். வருகின்ற மே 31 அன்று இவர்களது ஒப்பந்தம் காலாவதியாகின்றது.

சில அரசியல் தலையீடுகளின் அடிப்படையில், அவ்வப்போது அரசாங்க நிர்வாக விதிமுறைகளுக்குப் புறம்பாக இடம்பெறும் தெரிவுகளில் புதிய நபர்கள் உள்வாங்கப் பட்டிருக்கின்றனர். இதனைப்போன்றே இன்று சனிக்கிழமை ஜி.எப்.ஏ.டி.டிம் திட்டத்தின்கீழ், நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நபர்கள் மேற்படி பணிக்கு நியமனம் பெறவுள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்திலாவது ஏற்கனவே கடமையாற்றிவரும் பெண் ஊழியர்களின் உரிமையைப் பாதுகாக்குமுகமாக அவர்களுக்கு நிரந்தர நியமனம் கொடுக்கப்பட்வேண்டும். 

நிரந்தர நியமனம் கிடைக்காமல் ஏமாற்ற உணர்வுடன் பலர் அவ்வப்போது பணியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். வறுமையின் கொடுமை தாளாது அவ்வாறு சென்றவர்களில் பலர் மீண்டும் நியமனம்கோரியும் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஏற்கனவே பதினேழு வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றும் சிலர் திருமணம் முடிக்காமலும், பெரும்பாலோர் திருமணம் முடிப்பதைத் தவிர்த்தும் நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஏக்கத்துடன் பணியாற்றிவரும் ஊழியர்களை பணிநிரந்தரமாக்கும் நடவடிக்கையினை உடன் மேற்கொண்டு புதியவர்களை உள்வாங்கும் திட்டத்தினைக் கைவிடவேண்டும்.

இவர்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநரும் அமைச்சரும் கலந்துகொண்ட  வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் நான் எடுத்துரைத்தபோது அவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படும் என்று ஆளுநர் உத்தரவாதமளித்திருந்தார். இத்தகைய குளறுபடிகள் அமைச்சரொருவரின் தலையீட்டில் பலமுறை நிகழ்ந்துள்ளது. இது ஒன்றும் இம் மாவட்டத்திற்குப் புதிதல்ல.

இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பலர் மனவுளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்யும் அளவுக்கு அரசாங்கம்; தோற்றுவித்துள்ளதானது பல்வேறு சமூகப் பிரச்சினைகளை உருவாக்கியள்ளது. 

யுத்தப்பாதிப்பிலிருந்தும் குடும்ப உறவுகளை இழந்த துன்பத்திலிருந்தும் மீளமுடியாமல் தவிக்கும் இவ்வூழியர்களில் பலர் இச்செயலால் பெரும் கோபத்துள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதிவழங்கக்கோரி வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சகல அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியிருப்பதாக சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment